0 1 min 4 mths

ரேஷன் கடையில் மய்யத்தின் மக்கள் கள ஆய்வு (Social Audit).. #ஆரம்பிச்சுட்டோம்(05.03.2022)
தமிழகமெங்கும் உள்ள ரேஷன் கடைகள் (பொது விநியோக மையங்கள்) சரிவர இயங்குகின்றனவா என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி வார்டு எண் 150, மந்தைவெளி தெருவில் உள்ள பொதுவிநியோக மையம் எண் FD011-ல் மாவட்டச் செயலாளர் திரு. பாசில் தலைமையில், மாநிலச் செயலாளர்கள் திரு. சிவ இளங்கோ, வினோத், சஜீஷ், மாநில இணைச்செயலாளர் ஜெய்கணேஷ்  ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். காலை 8.30 மணிக்கு திறக்கப்படவேண்டிய ரேஷன் கடை 8.45 மணிக்கு மேல்தான் திறக்கப்பட்டது. கடையில் சுகாதாரம் சரி இல்லை. சீரமைக்கப்படாத கட்டிடம் என்பதால் சுவர்கள் ஈரமாகவும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. பொருட்கள் மழையில் நனையாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை ஊழியர் முறையிட்டும் துறை ரீதியான முறையான நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.

அடுத்தபடியாக அதே வார்டில் உள்ள அருணாச்சலம் நகர் ரேஷன் கடை எண் ED0034 -ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் செல்லும்போதே நேரம் காலை 9.30 மணியை கடந்துவிட்டது. அதுவரையிலும் அக்கடையில் நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. ஒரே ஒரு ஊழியர் மட்டுமே அக்கடையில் பணியாற்றுகிறார். பொருட்களை எடை போட்டுக் கொடுக்க ஊழியர் இல்லை. மேலும் சரியான அளவில் அங்குள்ள பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை. அதிருப்தியில் காத்திருந்த பொதுமக்கள் நம் நிர்வாகிகளிடம் ஒரு சில புகார்களை முறையிட்டனர். துறை சம்பந்தமான சொசைட்டிகளின் பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க வைப்பதாக மக்கள் புகார் அளித்தனர். அவ்வாறு அப்பொருட்களை வாங்கவில்லை என்றால் பொது விநியோகப் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து முறையான புகாரை உரிய துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக விரைவில் கொடுக்கப்படும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப ஒரு சிறிய ஆய்விலேயே இவ்வளவு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்றால், தமிழகமெங்கும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டால் பல ஆயிரம் குறைகளும், புகார்களும் வரும் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. ஆகவே, தமிழக அரசும், உணவுத் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்களும் உடனடியாக தமிழகத்திலுள்ள அனைத்து பொது விநியோக மையங்களிலும் உரிய ஆய்வு மேற்கொண்டு, எவ்வித குறைகளும் இல்லாதவாறு இனிவரும் காலங்களில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதுவரை மக்கள் நீதி மய்யத்தின் கள ஆய்வு தமிழகம் முழுவதும் தொடரும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் மய்யத்தின் 5ம்  ஆண்டு துவக்க விழாவில் (21/2/22)  மக்கள் பிரச்சினைகளுக்காக மய்ய நிர்வாகிகள் களத்தில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு,  தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளரிடம் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க கோரி  மனு கொடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகான களப் பணிகளை துவங்கி வைத்தார்.

தலைவரின் வழியைப் பின்பற்றி தமிழகமெங்கும் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ரேஷன் கடை உள்ளிட்ட அனைத்து  பிரச்சனைகளிலும் களத்தில் நின்று மக்களின் குரலாக ஒலிப்பார்கள்.

#ஆரம்பிச்சுட்டோம்

Leave a Reply

Your email address will not be published.